Monday, July 19, 2010

மாணிக்கவாசகர்

குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி
தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கிஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதேஎல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்எங்கோன் திருவாசகம் என்னும் தேன்."திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தைகேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞானநாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.இவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள். சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகரின் வரலாற்றை இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் காண்பதற்கு முன் காண்போம்.
பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தார். தென்னவன் பிரமராயர் என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. ஒரு நாள், அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல அரபு, பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர்.
ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த "திருப்பெருந்துறை" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, "சிவ சிவ" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு "மாணிக்கவாசகன்" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லி யனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.
மாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் "சொக்கராவுத்தரெ"ன்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரைவணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அரசன் வீட்டுக்கு ஒருவர் வன்-து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அவ்வமயம் பிட்டு விற்கும் வந்திக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவ்ளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசி அன்று சோதனையாக எல்லா பிட்டும் உதிர்ந்து விட அதை உண்டு விட்டு , அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க , கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால் அதிக்க அந்த அடி எல்லாவுயிர்களின்மேலும் விழ அரசன் மயங்கி நிற்க , தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.
மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் "சிவபுராணம்", "திருச்சதகம்" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரைபுரிந்து திருவண்ணாமலையில் "திருவெம்பாவை", "திருவம்மானை" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, "திருச்சாழல்" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் "அச்சோப்பதிகம்" போன்ற சிலவற்றைப்பாடினார். ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவறை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், "பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், "இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, "அந்நூலின் பொருள் இவனே!", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.

ஆவுடையார் கோவில்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தது
கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்
என்றும்
வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி
என்றும்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.
ஆவுடையார் கோவில்
அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.
1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோவில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.
தேரின் சிறப்பு
இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி திருவாரூர் காளையார்கோவில் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.
50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்
இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.
வடக்கயிறு
இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.
உருவம் இல்லை - அருவம்தான்
தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களுக்கு அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.
திபேத்தும் திருப்பெருந்துறையும்.
ஆவுடையார்கோயிலுக்கு இன்னொரு பெயர் திருப்பெருந்துறை ஆகும். மாணிக்கவாசகரால் அப்பெயரால் அழைக்கப்பட்ட திருத்தலம் இதுவேயாகும். இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.
இமயமலையில் உச்சிக்கு அப்பால் அடிவாரமாக அமைந்தள்ள திபேத்தில் ஓங்கி வளர்ந்த மரங்களே இல்லை. அப்படி இருக்கின்ற மரங்களோ குறு மரங்களாக இரண்டரையடி உயரத்திற்கு மேல் வளருவதில்லை. இப்படி மரங்களே இல்லாத திபேத்தில் உள்ள புத்தர் ஆலயத்தை பெரிய பெரிய மரங்களைக் கொண்டு கட்டியிருக்கிறார்கள். அங்கே அது பெரும் வியப்பிற்கு உரியதாக விளங்குகிறது. இந்திய எல்லையில் இமயமலைச் சரிவில் அல்மோரா - காலபானி போன்ற பகுதிகளில் தான் பெரிய மரங்கள் உள்ளன. இங்கிருந்து கால் நடையாக இந்த இமயமலையைக் கடக்க ஒற்றையடிப் பாதை கூட சரியாக இல்லாத மலைப்பகுதியை பனிப்பாறைகளைக் கடந்து எப்படித்தான் இந்த மரங்களைக் கொண்டு வந்து புத்தர் ஆலயம் அமைத்தார்கள் என்பது விளங்காப் புதிராகும்.
அதே போல இந்த திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் வியக்கத்தக்க ஒன்றாகும். மலைகள் குன்றுகளே இல்லாத இந்தப் பகுதியில் வெறும் கற்களினாலே கோயில் அமைந்திருப்பதை நினைத்துப் பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது.
சிலை செய்ய வேண்டுமானால் அதற்கென்று தகுந்த நன்றாக தேற விளைந்த கற்களை சிற்பிகள் தேர்ந்தெடுப்பார்கள். கண்ட கண்ட பாறைகள் எல்லாம் சிலை செய்ய ஏற்றதல்ல என்று சிற்ப சாஸ்திரம் படித்த கலைவல்லார்கள் கூறுகிறார்கள். அப்படி சிலை செய்ய ஏற்ற பாறைகள் 100 மைல் சுற்று வட்டாரத்தில் இல்லை என்று தொழில் நுட்ப அறிஞர்கள் கூறுகிறார்கள். சுமார் 50 மைல்களுக்கு அப்பாலுள்ள திருமயம் திருக்கோகர்ணம் நார்த்தாமலை சித்தன்னவாசல் விராலிமலை போன்ற பகுதிகளில் உள்ள குன்றுகளில் விளைந்த பாறைகள் சிலை செய்யத் தகுதியற்றன என்றும் அதை ஜல்லிக் கற்களாக்கி பாதைக்குப் பரப்ப மட்டுமே ஏற்றது என்றும் சிற்பிகள் கூறுகிறார்கள்.
ஆனால் சுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாதபோது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பாதைப் போக்குவரத்துக்களே இல்லாத காலத்தில் வெறும் பாறைகளைக் கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்றால் இந்தக் கோயிலில் அடங்காத்தனத்திற்கு அளவே இல்லையல்லவா
பூதம் கட்டிய கோயிலா
ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டாரப் பாமரமக்கள் இன்றும் பகர்வதுண்டு. அந்த அளவிற்கு மனிதர்களால் ஏதும் செய்ய முடிந்திராத பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கை
ஒரு வீட்டிற்கு தாழ்வாரம் அமைக்கும்போது பனங்கை தேக்கு மரத்திலோ பக்கவாட்டுக் கைகள் அமைத்து அதனை இரும்புக் கம்பிகளால் இணைத்து அதன் மீது குறுக்குச் சட்டங்கள் இணைத்து அதன்மீது ஒடு வேய்வது வழக்கம்.
இதே போல கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் இழைத்துக் காட்டிக் கல்லைக் கவிதை பாட வைத்துள்ளார்கள்.
தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதிலே குறுக்கக் கம்பிகளும் நான்கு பட்டைகம்பிகளும் ஆறு பட்டைக் கம்பிகளும் உருண்டைக் கம்பிகளும் இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.
ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.
இதனை உற்று நோக்கிப் பார்த்தால் இந்தக் கோயிலின் கலையின் வெல்லுந்திறன் படைத்த வேலைப்பாடமைந்த கலைக்கோயில் வேறில்லை என்று கூறி இக்கோயிலின் அடங்காத் தனத்தை நேரடியாக ஒப்புக் கொள்ளலாம்.
கோயிலின் சிறப்புக்கள்
துப்பாக்கிக் குண்டு துளைத்த கொடுங்கை

இந்த ஆவுடையார்கோயிலை பார்வையிட வருகை தந்திருந்த அந்தக் காலத்திய மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் இந்தக் கொடுங்கூரையை சுட்டுப் பார்த்து இருக்கிறார். அவரது கைத்துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவுடன் இந்த கொடுங்கைக் கூரை சுக்கு நூறாக சிதறி விழுந்துவிடவில்லை. வெடித்துச் சீறல் ஏற்படவில்லை. குண்டு பாய்ந்த இடம் எதுவோ அந்த இடத்தில் மட்டும் துப்பாக்கிக் குண்டின் அளவிற்கு மட்டுமே துளைத்துக் கொண்டு போய் இருக்கிறது. அந்த அளவிற்கு அந்தக் கூரை மென்மையும் தின்மையும் வாய்ந்ததாக அமைந்துள்ளதை இன்றளவும் சங்கீத மண்டபம் எனப்படும் தியாகராஜ மண்டபத்தில் காண முடியும்.
ஒரே கல்லிலான கற்சங்கிலி
இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.
[தொகு] மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்
இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.
உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை
இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.
இப்படி எத்தனை எத்தனையோ அற்புதங்கள். இதில் எதை எழுதுவது எதை விடுவது
படைகல்
இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான் 6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள்.
பச்சை அரிசி இல்லை - புழுங்கல் அரிசி தான்
எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.
அணையா நெருப்பு
6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை என்றால் இதன் மகோன்னதத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
ஆவியாகி தோற்றமற்று அருவமாக இங்கிருக்கும் ஆத்மநாதரை வழிபடும் பக்தர்களின் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்கிற வாழ்த்தொலியும் கொப்போசையும் குழலோசையும் பாவார்கள் ஓதுவார்களின் பக்தி இசைப் பிரவாகமும் கேட்கும்தோறும் இதமான பேரின்ப உணர்வை ஒவ்வொரு பக்தரும் பெற முடியும்.
பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது
இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.
இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்யசோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் அவ்வப்போது கட்டப்பட்டு ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக ஆக்கி இருப்பது கவனிக்கத்தக்கது.
பொன்னோடு - செப்போடு
உருவமற்ற அருவக் கோயில்
தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.
தேவதாரு மரம்
மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பது நமக்குத் தெரியும். தேக்கு மரங்கள் நு}ற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்ததாகும். ஆனால் இந்த தேவதாரு மரமோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரம் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.
வற்றாத திருக்குளம் --- 5 அடி ஆழத்தில்
இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவரைக்கு மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.
தந்தை பெரியார்
சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை இன்றைய மக்களுக்கு எடுத்துக் கூறி வந்த தென்னாட்டு சாக்ரடீஸ் எனப்படும் திராவிடக் கழகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இந்த ஆத்மநாதர் ஆலயத்தைப் பார்வையிட்டு இதன் தத்துவத்தைப் பற்றி மிக மேன்மையாக விளக்கிப் பேசிச் சென்றிருக்கிறார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற மாமூலர் கருத்தையும் நட்டகல்லும் பேசுமோ நாதன் தன் உள்ளிருக்கையில் என்று கூறிய சிவவாக்கியர் கருத்தையும் மக்களிடத்திலே எடுத்துக் கூறி வந்த சமுதாயச் சிற்பி பெரியார் அவர்கள் இந்த ஆவுடையார் கோயிலின் சிற்பங்களிலுள்ள கலை நுணுக்கத்தின் வடிவங்களைக் கண்டு வியந்து சென்றிருக்கிறார்கள்.
கவிபாடும் கற்சிலைகள்
உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.
அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.
நரம்பு துடிக்கும் சிலைகள்
இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.
நவநாகரீக நகைகள்
தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.
பஞ்ச கல்யாணிக் குதிரை
நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.
குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.
சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.
வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தி
இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.
இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும். இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.
1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி
இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடிகளான திருவாசகம் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மதுரையிலிருந்து குதிரை வாங்க
இந்த ஆலயத்தைக் கட்டிய மாணிக்க வாசகர் மதுரையிலிருந்து குதிரை வாங்க இங்கு வந்திருந்தார் என்பதும் அந்தக் காலத்திலே அரேபிய நாடுகளிலிருந்து குதிரைகள் கடல் மார்க்கமாக கொண்டு வந்து தமிழகத்தின் பல பாகங்களிலிருந்த மன்னர்களிடம் விற்றார்கள் என்பதும் ஆவுடையார் கோயிலுக்குக் கிழக்கே 15 மைல் தொலைவில் தற்போதுள்ள வங்கக் கடல் அந்தக் காலத்தில் இந்த ஆவுடையார்கோயிலுக்கு அருகில் 2 மைல் தொலைவில் இருந்தது என்பதும் மாணிக்க வாசகர் வரலாற்று ஆராய்ச்சிப்படியும் ஆவுடையார்கோயில் சுற்றுவட்டார மண்வள ஆராய்ச்சிப்படியும் கண்டறிவிக்கும்.
ஆதாரம்
தமிழ்மாமணி கவிஞர் அறந்தைத் திருமாறன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது வெளியிடப்பட்ட மாவட்ட மலரில் ஆவுடையார்கோயிலைப் பற்றி எழுதிய கட்டுரை இது.

Thursday, July 8, 2010

தூக்கம்விற்ற காசுகள்



இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்…
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்…?
தூக்கம் விற்ற காசில்தான்…
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே…
இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்…
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா – பம்பரம் – சீட்டு – கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து…
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்…
விசாவும் பாஸ்போட்டும் வந்து…
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்…
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
“கண்டிப்பாய் வரவேண்டும்
” என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக…
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே…
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்…
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்…
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்…
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே…
கரைந்துவிடுகிறார்கள்;!
“இறுதிநாள்” நம்பிக்கையில்தான்…
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்…
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு…
முதல் பார்வை… முதல் கழிவு…
இவற்றின் பாக்கியத்தை
டால்லர் வும் - ரின்கீட் வும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை…
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்…
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை…
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்…
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு…
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்…
தங்கையின் திருமணமும்…
தந்தையின் கடனும்…
பொருளாதாரமும் வந்து…
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

Thursday, July 1, 2010

மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம்


மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே நம் மரணத்தின் கடைசி நொடி வரை நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வருந்துவதும் மனித இயல்பு. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான மனிதர்களை துன்பங்களே ஆட்டுவிக்கின்றன. நமக்கு வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்குமே நாம்தாம் காரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்படியிருந்தும் நாம் துன்பத்தின் வாயிலில் சென்று சிக்கிக் கொள்கிறோம். அதற்கு காரணம்தான் என்ன? ஒரு சிறிய அலசல்.

ஒரு வேலையை நாம் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலையை பற்றின்றி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அந்த வேலையின் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். பற்றின்றி செய்ய வேண்டும் என்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. எடுத்த வேலையை ஏனோ தானோ என்று செய்வதற்கு பற்றின்றி வேலை செய்தல் என்பது பொருள் இல்லை. ஒரு செயலை எந்த பற்றும் இல்லாமல், அதாவது அந்த வேலைக்கு அடிமையாகாமல், அதன் பந்தத்திற்கு உள்ளாகாமல், அதன் முடிவு பற்றிய பயம் இல்லாமல், முழு மூச்சோடு அந்த வேலையை செய்ய வேண்டும். அப்போது அந்த வேலையை நாம் நன்றாக செய்ய முடியும். அந்த செயலின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும் நாம் அதனால் மகிழ்ச்சி கொள்ள மாட்டோம். முடிவு பாதகமாக இருந்தாலும் அதனால் நாம் வருத்தம் கொள்ளவும் மாட்டோம். காரணம் நாம் பற்றின்றி வேலை செய்கிறோம்.


எந்த ஒரு வேலையையும் என் உடம்பு செய்வதில்லை. நான் என்ற என் ஆன்மா இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணத்துடன் ஒரு செயலை செய்ய செய்ய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்மை இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நம்மை நெருங்குவதில்லை. காரணம் நாம் அந்த செயலை ஆன்மாவால் செய்கிறோம். ஆன்மா இன்பம் துன்பம் ஆகிய எதுவுமே அறியாதது. ஆன்மா நிலையானது, அழிவற்றது. இந்த உடம்பு நிலையற்றது. கண்டிப்பாக ஒருநாள் அழியக் கூடியது. உடம்பு அழியும்போது ஆன்மா வேறொரு உடலைத் தேடி செல்கிறது.

இப்படி ஒரு செயலைப் பற்றில்லாமல் செய்ய முயற்சிப்போம். பிறகு நம்மை இன்பம் துன்பம் எதுவுமே கட்டுப்படுத்தாது. எந்த ஒரு மனிதன் இன்பம் துன்பம் ஆகிய நிலைகள் இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருக்கின்றானோ, அந்த மனிதன் ஒரு செயலை ஆன்மாவால் செய்கிறான் என்று அர்த்தம். அவன் முழு சுதந்திரம் உடையவனாக இருக்கின்றான் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

மேலே சொன்ன கருத்துக்கள் கீதையின் மையக் கருத்தாகும். அதனைக் கடைப்பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் கடைபிடித்தால் உங்களுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை. ஆன்மாவில் நிலைபெற்று விட்டீர்கள். அடுத்த பிறவியும் இல்லை. காரணம் உங்களுக்கு ஆசைகள் இருப்பதில்லை. ஆசை இருக்கும் வரை உங்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் ஆசையில்லாமல், பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்படுகிறது.

நான் ஏதோ கீதையை உபதேசிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். கீதையில் நான் படித்த எனக்கு பிடித்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மேலே கூறியவற்றை கடைபிடிக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். வாசித்தமைக்கு

வந்தே மாதரம்







வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

Wednesday, January 13, 2010

செல்லங்கள்


என் செல்லங்கள்
என் நாடி துடிப்புகள்
எகிறிகிறது உங்கள்
பாசத்தினால்..........
குறையுங்கள் உங்கள் முத்தங்களால்..

அருமையான வரிகள் சில..




1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...
அன்புடன்..
மணிமாறன்.கா